கணித, உயிரியல் பிரிவுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் முதலிடம்!
வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில், யாழ்ப்பாணம் மாவட்ட மட்டத்தில் கணித மற்றும் உயிரியல் பிரிவுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் முதலிடங்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
கணிதப் பிரிவில் அனுராகந்தன் விஸ்வகாந்தன் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 12 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
அதேவேளை உயிரியல் பிரிவில் சந்திரபாலா கதுசன் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 20 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் உமாபதி கிருஷாந்த் 2 ஏ, பி சித்தியைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், தேசிய ரீதியில் 50 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
ஹாட்லிக் கல்லூரியில் கணிதப் பிரிவில் 10 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 2 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும் பெற்றுள்ளதுடன், உயிரியல் பிரிவில் 6 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 4 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
வர்த்தகப் பிரிவில் 2 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், கலைப் பிரிவில் ஒரு மாணவன் 3 ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.





