பாகிஸ்தானில் X தளம் மீதான தடை நீடிப்பு … அரசுக்கு எதிராக கொந்தளித்த நீதிமன்றம்
தேசத்தின் பாதுகாப்பு காரணங்களுக்காக, ’எக்ஸ்’ சமூக ஊடக தளத்தை பாகிஸ்தானில் முடக்கி வைத்திருப்பதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் நீதிமன்றதல் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து நீதிமன்றத்தின் கண்டனத்துக்கும் அமைச்சகம் ஆளானது.
அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதுமின்றி எக்ஸ் தளத்தை நாட்டில் முடக்கி வைத்திருப்பது குறித்து பாகிஸ்தான் அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை எடுத்ததாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், அது தொடர்பான வழக்கு விசாரணையின் போது சிந்து உயர் நீதிமன்றத்தில் ஒப்புதல் தந்ததுள்ளது.
அரசின் முறையற்ற செயல்பாடுகளுக்கு குட்டுவைத்த நீதிமன்றம், உடனடியாக எக்ஸ் தளத்துக்கான தடையை நீக்கும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டது. அரசின் சட்டப்பூர்வ உத்தரவுகளை கடைபிடிக்கத் தவறியதாக, கடந்த 2 மாதங்களாக எக்ஸ் தளத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதையும் மக்கள் மத்தியில் மறைப்பதற்காக ஆங்காங்கே துண்டுத்துண்டாக முடக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு அச்சங்களை சுட்டிக்காட்டிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில், எக்ஸ் தளத்துக்கான தடையை விதித்ததாக தேசத்தின் தொலைத்தொடர்பு ஆணையம் நீதிமன்ற விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் தந்தது.முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து அவரது கட்சியினர் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, பிப்ரவரி 17 முதல் பாகிஸ்தானில் எக்ஸ் தளம் படிப்படியாக முடங்கியது.
அரசாங்கத்தின் சட்டப்பூர்வ உத்தரவுகளை ட்விட்டர் நிர்வாகம் கடைப்பிடிக்கத் தவறியது; ட்விட்டரை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான அரசின் கவலைகளை நிவர்த்தி செய்யத் தவறியது உள்ளிட்ட காரணங்களினால் ட்விட்டர் தடை விதிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது’ என உள்துறை அமைச்சகம் நீதிமன்ற விசாரணையில் விளக்கம் தந்துள்ளது.
சிந்து உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அகீல் அகமது அப்பாஸி, இந்த வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பை கடுமையாக எச்சரித்தார். “எக்ஸ் தளத்தை பாகிஸ்தானில் மூடுவதன் மூலமாக நீங்கள் என்ன சாதிக்கிறீர்கள்… உலகம் நம்மைப் பார்த்து சிரிக்காதா?” என உள்துறை அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பினார். அதன் பின்னர் “ ஒரு வார அவகாசத்தில் எக்ஸ் தளத்தின் தடையை முழுமையாக நீக்கியிருக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். இதன் மூலம் பாகிஸ்தானில் எக்ஸ் சமூக வலைதளம் முடங்கியதன் பின்னணியில் அந்நாட்டு அரசாங்கம் இருந்தது, குடிமக்களுக்கு முழுமையாக விளங்கியுள்ளது.