பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் BNP வெற்றி நடை!
பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பி.என்.பி. எனப்படுகின்ற பங்களாதேஷ் தேசியவாத கட்சி Bangladesh Nationalist Party (BNP) வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.
ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை தமது கட்சி பெற்றுள்ளது என BNP இன்று அறிவித்தது.
இதற்கமைய பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் Tarique Rahman பதவி ஏற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷில் கடந்த 2024ம் ஆண்டு மாணவர் புரட்சி வெடித்தது. இதனையடுத்து மக்கள் போராட்டமும் வெடித்ததால் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா இராஜினாமா செய்தார்.
தமது பாதுகாப்பு கருதி அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போதும் அங்கேயே தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து போராட்டக்காரர்களின் ஆதரவுடன் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு மலர்ந்தது.
2026 பெப்ரவரி 12 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய பங்களாதேஷில் நேற்று தேர்தல் நடைபெற்றது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
இதனால் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி (பிஎன்பி), அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி Jamaat-e-Islami ஆகிய கட்சிகளுக்கு இடையே இரு முனை போட்டி நிலவியது.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதியில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைவால் மீதமுள்ள 299 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது.
இதில் 50 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்து 755 வேட்பாளர்கள், 273 சுயேட்சைகள் போட்டியிட்டனர்.
நாடு முழுவதும் உள்ள 42 ஆயிரத்து 779 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
8 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 9 லட்சம் பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பளித்தனர்.
180 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் பி.என்.பி. கட்சி அபார வெற்றி பெற்றதை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.





