பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலைக்கு ‘வெட்டு’!
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பா.ஜ.கவின் BJP வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அண்ணாமலைக்கு இடமளிக்கப்படாமை தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
பெரும்பாலானோர் கணித்தபடியே வேட்பாளர் பட்டியல் அமைந்திருந்தாலும், எவரும் எதிர்பார்க்காத வகையில் அண்ணாமலைக்கு ‘வெட்டு’ விழுந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக தேர்தலுக்கான தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் இம்முறை நயினார் நாகேந்திரன், எல்.முருகனின் கையே ஓங்கியிருந்தது.
இதனால், அவர்கள் அண்ணாமலைக்கு சாதகமான தொகுதிகளை கேட்டுப் பெறாமல் இருந்துவிட்டனர் என்று அவரின் ஆதரவாளர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.
கடந்த முறை அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை, இம்முறை கோவையின் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் களமிறங்க திட்டமிட்டிருந்தார்.
எனினும், இம்முறை அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
இதனால் மொடக்குறிச்சியில் களமிறங்குமாறு அண்ணாமலைக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், தனக்கு சாதகமான தொகுதி எதுவும் இல்லாததால் இம்முறை போட்டியிடுவதில்லை என்று அண்ணாமலை உறுதியாக மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேட்பாளர் பட்டியல் குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, ‘ஒரு தொண்டனாக பாஜகவின் வெற்றிக்கு உழைப்பேன். தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றிபெற பாடுபடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.





