ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிடம், சுமந்திரன் விடுத்துள்ள கோரிக்கை!
அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிடம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தள்ளார்.
கடந்த சில தினங்களாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மானதுங்க ராஜினாமா செய்தமை தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அவருடைய கோரிக்கை வந்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று (14) இடம் பெற்றது. இதன்போதே சுமந்திரன் மேற்படி கோரி்க்கை விடுத்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட சுமந்திரன், ஜனாதிபதி எங்களோடு நடத்திய பேச்சு வார்த்தையிலும் கூட அமைச்சரவை தீர்மானங்களை நிறைவேற்றுவதில் விருப்பம் இல்லாதவர் போல பேராசிரியர் மானதுங்க காட்டிக்கொண்டார்.
அது அமைச்சரவைக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனை. எங்களுக்குள்ள பிரச்சனை வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் நிலங்கள் அபகரிப்பு பற்றியது. அமைச்சர் விதுர விக்ரமநாயக்க வடக்கு, கிழக்குக்கு பாரிய இராணுவப் பட்டாளங்களோடு சென்று வருகிறார்.
அவருடைய பணிப்புரையின் கீழ் தான் சட்ட விரோத காணி அபகரிப்புகள் இடம் பெற்று வருகின்றன. அதனால் ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்பது விதுர விக்ரமநாயக்கவை பதவி விலக்க வேண்டும் என்பதுதான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.