மழை வேண்டி சவூதி அரேபியாவில் கூட்டு பிராத்தனைக்கு அழைப்பு!
சவூதி அரேபியாவின் மன்னர், நாடு முழுவதும் உள்ள குடிமக்களை மழை வேண்டி பிரார்த்தனையில் பங்கேற்குமாறு வலியுறுத்தியுள்ளார். தாமதமான மழை மற்றும் வறட்சிக்கு மத்தியில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சலாத் அல் இஸ்திஸ்கா எனப்படும் மழை வேண்டி செய்யப்படும் பிரார்த்தனையில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் வளைகுடா நாட்டின் பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்ட போதிலும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
அரபிக்கடலில் இருந்து வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆலங்கட்டி மழை தொடர்பான முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்டபோதும் பெரும்பலான இடங்களில் வரண்ட காலநிலையே நிலவுகிறது.
இந்நிலையில் ராயல் கோர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவூதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்கள் கடந்த காலங்களில் தாமதமான மழை அல்லது வறட்சியைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் இஸ்திஸ்கா தொழுகையை நிறைவேற்றியுள்ளனர்.
வல்லமையுள்ள இறைவனை, நிலம் மற்றும் மக்கள் மீது கருணை காட்டுமாறும், தனது அடியார்களின் வேண்டுதலுக்குப் பதிலளிக்குமாறும், அவர் அனுப்புவதை அவர்களுக்கு கருணையாகவும் ஒரு காலத்திற்கு ஏற்பவும் செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.