தாலிபான் நடத்திய தாக்குதல்களில் 58 பாகிஸ்தான் வீரர்கள் பலி – மூடப்பட்ட எல்லை

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பாதைகளை மூடியதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை (11) அன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையோரப் பகுதியில் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் தலிபான் படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில் தலிபான் படையினர் பதில் தாக்குதல் மேற்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் இரவு நேரத்தில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் எங்களது படையினர் செயல்பட்டனர். எங்கள் வான் எல்லையில் அத்துமீறித் தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டது. அதற்கு பதிலடி கொடுத்தோம். இந்தத் தாக்குதல் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு முடிவுக்கு வந்தது. எதிர்தரப்பு எங்கள் வான் எல்லையில் தாக்குதலைத் தொடர்ந்தால் அதை இடைமறிப்போம். மேலும், அவர்களுக்குத் தக்க பதிலடி தர எங்கள் பாதுகாப்புப் படையினர் தயாராக உள்ளனர் என ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இனாயத்துல்லா தெரிவித்துள்ளார்.