பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 5,467 பேர் கைது!
2025 ஜனவரி முதல் இற்றைவரை 62 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் எவ்.யு. வூட்லர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதில் காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பங்கேற்றிருந்தார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
“போதைப்பொருள் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மற்றும் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 2025 ஜனவரி முதல் இதுவரையில் 62 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பரிசோதனைகள் ஊடாக களவு, துஷ்பிரயோகம்,மோசடி உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 5 ஆயிரத்து 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில், 57 ஆயிரத்துக்கு மேற்பட்ட பிடியாணை கைதுகளும், 38 ஆயிரத்துக்கு மேற்பட்ட திறந்த பிடியாணைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக குவித்துள்ள சொத்துகளும் சட்ட நடவடிக்கை மூலம் அரசுடமையாக்கப்பட்டுவருகின்றன.” எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.





