கைவிரித்தார் சஜித்- கடுப்பில் மொட்டு கட்சி- மீண்டும் அழைப்பு!
நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்புக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர(Janaka Wakkumbura) மேற்படி அழைப்பை விடுத்தார்.
நுகேகொடை கூட்டத்தில் தமது கட்சி பங்கேற்காது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள நிலையிலேயே, மொட்டு கட்சி தரப்பில் இருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
” இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் 21 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம். இது தனி நபர்களை பிரச்சாரப்படுத்தும் கூட்டம் அல்ல. எனவே, இதில் பங்கேற்பதால் கட்சிகளின் தனித்துவத்துக்கு பாதிப்பு ஏற்படாது.” எனவும் மேற்படி ஊடக சந்திப்பின்போது ஜானக வக்கும்புர தெரிவித்தார்.





