இன்றைய முதலாவது போட்டியில் பெங்களூரு அணி வெற்றி
16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு, டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி அரை சதமடித்து அவுட்டானார். மஹிபால் லாம்ரோர் 26 ரன்னிலும், மேக்ஸ்வெல் 24 ரன்னிலும், டுபிளிசிஸ் 22 ரன்னிலும் அவுட்டாகினர். டெல்லி அணி சார்பில் மிட்செல் மார்ஷ், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
தொடக்கம் முதல் டெல்லி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மணீஷ் பாண்டே மட்டும் தாக்குப்பிடித்து அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.
அக்சர் படேல் 21 ரன்னும், டேவிட் வார்னர் 19 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் நோர்க்யா 23 ரன்கள் எடுத்தார். இறுதியில், டெல்லி அணி 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பில் விஜயகுமார் விஷாக் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.