சோனியா காந்திக்கு என்ன நடந்தது? ராகுல் காந்தியின் கேரள பிரச்சார பயணம் ரத்து
சோனியா காந்தியின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள மாநிலத்தில் இன்று மேற்கொள்ள இருந்த தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நிலை பாதிப்பு காரணமாக புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை சோனியா காந்தி உணர்ந்ததாகவும், அதன் காரணமாக அவர் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சோனியா காந்தியின் உடல்நிலையில் கவலைக்குரிய தீவிர பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும், அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த ஜனவரி மாதத்தில் சோனியா காந்தி இதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது டெல்லியில் நிலவிய கடும் குளிர் மற்றும் காற்று மாசுபாடு, அவரது உடல்நிலை பாதிக்கப்பட காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
சோனியா காந்திக்கு ஆஸ்துமா பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரியில் அந்த பாதிப்பு சற்று தீவிரமடைந்திருந்தது. இந்நிலையில், சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது மகனும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று மேற்கொள்ள இருந்த கேரள சுற்றுப் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.
கேரளாவின் கோழிக்கோடு நகரில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (யுடிஎஃப்) தேர்தல் பிரச்சாரத்தை
ராகுல் காந்தி இன்று தொடங்கி வைப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.





