உக்ரைனுக்கு பிரான்ஸ் அமைச்சரின் விஜய நாளில் ரஷ்யா மாபெரும் தாக்குதல் – மின் உற்பத்தி கடுமையாக பாதிப்பு
பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கியேவுக்கு விஜயம் செய்த நாளிலேயே, ரஷ்யா உக்ரைனின் பல நகரங்களை இலக்குவைத்து பெருமளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெப்ரவரி 07ஆம் திகதி நடைபெற்ற இந்த தாக்குதல், அதற்கு சில நாட்களுக்கு முன்பு பிப்ரவரி 03ஆம் திகதி NATO (நேட்டோ) பொதுச்செயலாளர் Mark Rutte (மார்க் ருட்டே) உக்ரைனுக்கு வந்திருந்தபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் வெறும் அரசியல் எச்சரிக்கை அல்ல என்றும் திட்டமிட்ட இராணுவ மூலோபாயத்தின் ஒரு பகுதியெனவும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் (University of St Andrews) வரலாற்றுப் பேராசிரியர் பிலிப்ஸ் ஓ’ப்ரையன் (Phillips O’Brien) தெரிவித்துள்ளார்.
அவரின் கூறப்படி, முதலில் கிழக்கு உக்ரைன், குறிப்பாக தலைநகர் கீவ் மற்றும் முன்களப் பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டன.
பின்னர், உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பை நீட்டித்து சோர்வடையச் செய்த பின், தாக்குதல்கள் மேற்கு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் 408 ட்ரோன்கள் மற்றும் 39 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவற்றை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
எனினும், மீதமிருந்த தாக்குதல்கள் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தின.
அணு மின் நிலையங்களுடன் தொடர்புடைய முக்கிய வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) ஒரு மின் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், ஏனைம சில நிலையங்கள் மின் உற்பத்தியை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்கள் உக்ரைனின் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





