பாகிஸ்தான் நோக்கிச் சென்ற கப்பலை திருப்பி அனுப்பிய ஈரான்!
ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் கப்பல் ஒன்றை ஈரான் இராணுவம் திருப்பி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் நோக்கி முறையான அனுமதி இன்றி பயணித்த ‘Selan’ என்ற கொள்கலன் கப்பல், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாக நுழைய முயன்றபோது ஈரானிய கடற்படையினர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த நடவடிக்கை குறித்து IRGC கடற்படைத் தளபதி அலிரேசா டாங்சிரி தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் எந்தவொரு கப்பலும் ஈரானிய கடல்சார் அதிகாரிகளுடன் முழுமையான ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும், அனுமதி இன்றி எமது எல்லைக்குள் நுழைய முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
‘பகைமையற்ற’ நாடுகள் எமது கடல் எல்லையைப் பயன்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசித்து, சில சந்தர்ப்பங்களில் அதற்கான கட்டணத்தைச் செலுத்திப் பயணிக்க முடியும்.
ஈரானின் எதிரி நாடுகளுடன் தொடர்புகளைப் பேணும் அல்லது ஈரானின் சட்டங்களுக்கு இணங்காத கப்பல்கள் எமது கடல் எல்லையைக் கடக்க அனுமதிக்கப்படமாட்டாது என அலிரேசா டாங்சிரி குறிப்பிட்டுள்ளார்.





