இலங்கை செய்தி

கறுப்பு கொடி பறக்கவிடுவது தவறு கிடையாது: யாழ்.பல்கலை மாணவர்களுக்காக சுரேஷ் களத்தில்!

“யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என்ற பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது.”

இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ்  பிரேமச்சந்திரன் Suresh  Premachandran தெரிவித்துள்ளார்.

போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத்தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் விசேட அறிக்கையொன்றின் ஊடாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

“இலங்கை என்பது சிங்கள, தமிழ் இராசதானிகளாக பிளவுபட்டு இருந்ததென்பதும் 1883ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் தமது நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு.

ஒன்றிணைத்த இராசதானிகளை சிலோன் என்ற பெயரில் சூழ்ச்சியின் காரணமாக பெரும்பான்மையினமான சிங்கள தரப்பிடம் கையளித்து விட்டுச் சென்றார்கள் என்பதும் வரலாறு.” எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவ்வாறான சுதந்திர தினத்தையோ அல்லது குடியரசு தினத்தையோ தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

பெரும்பான்மை சிங்கள அரசுகளால் தமிழ் மக்களின் மொழியுரிமை, வாழ்விட உரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்புக்கான உரிமை போன்றவை பல்வேறு வழிகளில் நிராகரிக்கப்பட்டு தமது சுதந்திரத்தைத் தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டதன் காரணமாகத்தான் இங்கு நீண்டதோர் ஆயுதப்போராட்டமே நடைபெற்றது.

ஆகவே, தமிழ் மக்கள் ஏன் போராடுகிறார்கள்? ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள்? ஏன் ஊர்வலங்களையும் கவனவீர்ப்புப் போராட்டங்களையும் நடத்துகின்றார்கள்? – என்பதற்கு அரசு சரியான தீர்வைக் கண்டுகொள்ள வேண்டும்.

அதைவிடுத்து ஜனநாயகபூர்வமான எதிர்ப்பைக் காட்டும் மக்களையோ மாணவர்களையோ தண்டிப்பதானது ஜனநாயக விரோதமானதும் சட்டவிரோதமானதுமாகும்.”
எனவும் மேற்படி அறிக்கை ஊடாக சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் அடிப்படை உரிமைகளில் பேச்சுரிமை, எழுத்துரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை, ஜனநாயக வழிமுறைகளில் கறுப்புக்கொடி ஏற்றுதல் உட்பட எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையில் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு கறுப்புக்கொடி ஏற்றுவது இயல்பானது.

தமிழ் மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதும் தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதும் துக்ககரமான செயற்பாடே.

அவ்வாறான துக்ககரமான செயற்பாட்டின்போது பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ கறுப்புக் கொடி கட்டுவது சட்டவிரோதம் என சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

மக்களுக்கோ அன்றில் சொத்துக்களுக்கோ எவ்வித இடையூறும் விளைவிக்காமல் மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டுவது என்பது ஜனநாயகபூர்வமான நடவடிக்கையே.

கடந்த 4ஆம் திகதி யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்,

அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்கழகம் கோருவதும் அதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பதும் சட்டவிரோதமானதுடன் ஜனநாயக விரோதமானதுமாகும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கருதுகின்றது.

மாணவர்களின் அடிப்படை உரிமைகளிலோ ஜனநாயக வழிமுறையிலான போராட்டங்களிலோ தலையீடு செய்யாமல் அவர்கள் சுதந்திரமாகவும் அச்சவுணர்வின்றியும் தமது கல்வியைத் தொடர பல்கலைக்கழக ஆசிரிய சமூகம் அதற்கான பொதுவெளியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

பல்வேறுபட்ட மாணவர் போராட்டத்தை நடத்தி மிகப் பிரமான்டமான அறகலய போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ் மாணவர்களின் ஜனநாயக பூர்வமான போராட்டங்களை நசுக்குவதோ அன்றி அவர்களைத் தண்டிப்பதோ சரியானதா என்பதை ஆட்சியிலிருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.” – எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரனால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!