அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் – 18 வயது இளைஞரை மடக்கிப் பிடித்த FBI!
அமெரிக்காவின் – வட கரோலினா மாநிலத்தில் புத்தாண்டு தினத்தில் முன்னெடுக்கப்பட இருந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட கரோலினாவின் சார்லோட்டில் உள்ள ஒரு மளிகைக் கடையை குறிவைத்து இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ISIS அமைப்பினரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட , 18 வயதான கிறிஸ்டியன் ஸ்டர்டிவன்ட் (Christian Sturdivant) என்ற நபர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், “தனி ஓநாய்” (lone wolf) பாணி தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு பொருள் உதவி வழங்க முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தனி ஓநாய் (lone wolf) பாணி தாக்குதல் என்பது பயங்கரவாத அமைப்பினரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட ஒருவர் அரசாங்கம் அல்லது பயங்கரவாத அமைப்பின் உதவி இல்லாமல் தனியாக தாக்குதலை முன்னெடுக்கும் ஒருவரை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.
சம்பவம் குறித்த மேலதிக விரிவான விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்ற சூழ்நிலையில் மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.





