சீனா இரகசியமாக அணுவாயுத சோதனை செய்ததா? – குற்றஞ்சாட்டும் அமெரிக்கா!
சீனா இரகசிய அணுவாயுத சோதனையை நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் நடந்த ஐ.நா. ஆயுதக் குறைப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் துணைச் செயலாளர் தாமஸ் டினானோ (Thomas DiNanno) சீனா அணுவாயுத சோதனைகளுக்கு தயாராகி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், “அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் அப்பட்டமான பொய்கள். அணுசக்தி சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கான சாக்குப்போக்குகளை அமெரிக்கா புனைய முயற்சிப்பதை சீனா உறுதியாக எதிர்க்கிறது” என்று தெரிவித்துள்ளது.
“உடனடியாக அதன் பொறுப்பற்ற செயல்களை நிறுத்த வேண்டும்” என்றும் அமெரிக்காவை வலியுறுத்தியது.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த அக்டோபர் மாதம், வொஷிங்டன் மொஸ்கோ மற்றும் பெய்ஜிங்குடன் “சமமாக” அணு ஆயுத சோதனையைத் தொடங்கும் என்று கூறினார்.
ஆனால் அவர் எந்த வகையான அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்க விரும்புகிறார் என்பதை விவரிக்கவோ அல்லது விளக்கவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





