காசா அமைதிப் படைக்குழுவில் இணையும் ஆஸ்திரேலியா – நிலைமையை ஆராய பாதுகாப்பு அதிகாரி நியமனம்

அமெரிக்கா தலைமையிலான காசா அமைதிப் பணிக்குழுவில் ஆஸ்திரேலியாவும் இணையவுள்ளது.
இதற்கமைய ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் இஸ்ரேல் செல்லவுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
20 அம்ச போர் நிறுத்த அமைதித் திட்டத்தில், காசாவில் சர்வதேச படைகளை நிலைநிறுத்தும் யோசனையும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய அமெரிக்கா, பிரிட்டன், இந்தோனேசியா, ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தமது நாடுகளின் படைகளை அனுப்பவுள்ளன.
200 படையினரை அனுப்புவதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையிலேயே நிலைமையை ஆராய்வதற்காக ஆஸ்திரேலியாவும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை அனுப்புகின்றது.
இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் நிறுத்தம் 12 நாட்களாக அமுலில் உள்ளது. தற்போது போர் நிறுத்தத்தின் இரண்டாவது அம்சம் பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை களைய வேண்டும் என்ற விடயம் பிரதானமானது.
அதேவேளை, போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக காசா தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இவ்வாறான தாக்குதல்களில் 88 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.