மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கைதானவர்களை சிறையில் சந்தித்த சாணக்கியன்
மாவீரர் தினத்தன்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள மாணவன் உட்பட நான்கு பேரை பிணையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியிருந்தார்.
இதில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரம் பயிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள நியுட்டன் தனுசாந்த் என்னும் மாணவர் தனக்கு பிணையாவது பெற்றுத்தருமாறும் தான் பரீட்சைக்கு தோற்ற வழியேற்படுத்துமாறும் தன்னிடம் கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
அண்மையில் இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியிருந்த நிலையில் இன்றைய தினம் இது தொடர்பில் ஜனாதிபதி செயலாளரின் கவனத்திற்கும் கொண்டுசென்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.