இலங்கையில் கனடா பிரதமரின் உருவ பொம்மை எரிப்பு!
வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்ஸிம் தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தில் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று இடம்பெற்றிருந்தது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
”பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம் , ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா , படுகொலை எங்கே நடந்தது? , ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உனக்கு தேவை பயங்கரவாதம் , எங்களுடைய நாட்டில் கை போடாதே ஜஸ்டின் ட்ரூடோ” போன்ற கோசத்தினை எழுப்பியவாறும் இலங்கையின் இறையாண்மைக்கு கை கொடுங்கள் , கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம் போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இறுதியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளும் வீதியில் போடப்பட்டு எரிக்கப்பட்டன.
இவ் போராட்டத்தில் தமிழ் , முஸ்ஸிம் , சிங்கள இனத்தினை சேர்ந்த 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.