ஆசிய நாடுகளுக்கு பயணிக்கவுள்ள ட்ரம்ப் – பால்ஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியாவிற்கு பயணமாகவுள்ளார். இந்நிலையில் வடகொரியா இன்றைய தினம் புதிய பால்ஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது.
தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் இது தொடர்பான கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை.
இருப்பினும் அமெரிக்காவுடனான அதன் உறுதியான இராணுவ கூட்டணியின் அடிப்படையில் வட கொரியாவின் எந்தவொரு ஆத்திரமூட்டலையும் தடுக்க தென் கொரியாவின் இராணுவம் தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை நடவடிக்கை எதற்காக முன்னெடுக்கப்பட்டது என்ற தகவலை வடகொரியா வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சீன, ரஷ்ய மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இராணுவ அணிவகுப்பில் வடகொரிய ஜனாதிபதி கிம் (Kim) ஒரு புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை காட்சிப்படுத்தியிருந்தார்.
ஹ்வாசோங்-20 (Hwasong-20) என்று பெயரிடப்பட்ட இந்த புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது “மிகவும் சக்திவாய்ந்த அணு மூலோபாய ஆயுத அமைப்பு” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





