முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி தோல்வி
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட T20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் T20 போட்டி தம்புலாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் அசலங்கா 59 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 51 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பிராண்டன் கிங், எவின் லெவிஸ் ஜோடி அதிரடியில் மிரட்டியது.
முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்த நிலையில் லெவிஸ், 28 பந்தில் 50 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷாய் ஹோப் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, அதிரடியாக ஆடிய பிராண்டன் கிங் அரை சதம் கடந்து 63 ரன்னில் வெளியேறினார். ரோஸ்டன் சேஸ் 19 ரன்னும், ரோவ்மேன் பவெல் 13 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், T20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.