நியாயமற்ற உயர் வரியறவீட்டு வீதம் வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும்

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில், ஒரே தடவையில் வரிவருமானத்தை 200 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு முற்படுவது பொருத்தமற்றதாகும். வரியறவீட்டு வீதம் நியாயமற்றவகையில் மிகவும் உயர்வாகக் காணப்படும்போது வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இது பல்வேறு வழிகளிலும் நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்று துறைசார் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கைக்கு ஏற்றவாறான நியாயமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புடன்கூடியதுமான வரியறவீட்டு முறைமை தொடர்பான 32 பக்கங்களைக்கொண்ட முன்மொழிவொன்று தொழில்சார் நிபுணர்களின் தொழிற்சங்கக்கூட்டணியினால் வெளியிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் இந்திக கருணாதிலக, பேராசிரியர் அருண ஷாந்தாரச்சி, கலாநிதி ஹரித அளுத்கே, பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம, கலாநிதி சருடத்த இலங்கசிங்க, கலாநிதி மஞ்சுள ஹேரத், அனுபா நந்துல, மஞ்சுள சமரசிங்க, பிரசங்க ரணவத்த, கலாநிதி கசுன் குமாரகே மற்றும் மயூரி அமரசிறி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த முன்மொழிவிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.