இணையத்தில் கசிந்த மிக இரகசியமான புலனாய்வு பாதுகாப்பு தகவல்கள் – குழப்பத்தில் அமெரிக்கா
அமெரிக்காவின் மிகவும் இரகசியமான புலனாய்வு பாதுகாப்பு தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த நிலையில் இதனை அம்பலப்படுத்தியது யார் என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உக்ரைனின் வான்பாதுகாப்பு இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பின் செயற்பாடுகள் உட்பட பல முக்கிய பாதுகாப்பு புலனாய்வு தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் இதனை வெளியிட்டது யார் என்பதை கண்டறிவதற்கான தீவிர முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்தவர்களே இந்த விபரங்களை அம்பலப்படுத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உக்ரைன் யுத்தம்,சீனா மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா உட்பட பல பகுதிகள் குறித்த ஆவணங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது அமெரிக்காவின் நேசநாடு இல்லை அமெரிக்காவை சேர்ந்த ஒருவரே என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வெளியாகியுள்ள பல ஆவணங்கள் அமெரிக்காவிடமே இருந்ததால் இதனை அமெரிக்காவை சேர்ந்த ஒருவரே அம்பலப்படுத்தியிருக்கவேண்டும் என பென்டகனின் முன்னாள் அதிகாரியான மைக்கல் மல்ரே ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன இதனை ரஸ்ய ஆதரவு சக்திகள் செய்திருப்பதற்கான நடவடிக்கைகளை நிராகரிக்க முடியாது என தெரிவிக்கும் அதிகாரிகள் விக்கிலீக்சிற்கு ( 2013)பின்னர் இவ்வளவு பெருமளவு தகவல்கள் கசிந்துள்ளது இதுவே முதல்தடவை என தெரிவித்துள்ளனர்.