ஜி.வி இசையில் பாடிய யுவன்… எந்த படத்தில் தெரியுமா?
ஒரு இயக்குனரின் படத்தில் இன்னொரு இயக்குனர் நடிப்பது சாதாரணம் தான், அதேபோல் ஒரு இசையமைப்பாளரின் இசையில் இன்னொரு இசையமைப்பாளர் பாடுவதும் இன்று சாதாரணமாகி விட்டது.
அந்த வகையில், “பராசக்தி” திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார்.
இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா புதிய பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் – இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோரின் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பராசக்தி”.
கடந்த 1960-களில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் நடைபெற்ற மொழிப்போர் தொடர்புடைய கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100 ஆவது திரைப்படமான “பராசக்தி” -யில், பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம், வரும் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






