தும்மலை அடக்கினால் என்ன நடக்கும்?
தும்மலை அடக்க எத்தனையோ வழிகளைப் படித்திருப்போம். ஆனால், அந்தத் தும்மலை அடக்கலாமா என்ற கேள்வி எப்போதாவது எழுந்துள்ளதா?
கடந்த வருடம் ஒருவரின் கடுமையான தொண்டை வழிக்குப் பின்னால் ஒரு திடுக்கிடும் தகவலை மருத்துவர்கள் கண்டுபிடித்து வெளியிட்டனர். அது பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. இதுகுறித்து டண்டீ பல்கலைகழக மருத்துவர்கள் கூறியதாவது, “ஒருவர் தும்மும்போது வாய் மற்றும் மூக்கை மூடினால் மூச்சுக்குழாயின் மேல் பகுதியில் அழுத்தம் 20 மடங்கு அதிகரிக்கும்.
இதன் காரணமாக ஒரு நபரின் செவிப்பறை கிழியும் அபாயம் உள்ளது. ரத்தக்குழாயில் எதிர்பாராத வீக்கமும் ஏற்படலாம். இது, அனீரிசம் (aneurysm) என்று அழைக்கப்படுகிறது. மார்பு எலும்புகள் உடையலாம் அல்லது வேறு சில கடுமையான காயங்களும் ஏற்படலாம்.” என்றனர்.
“தும்மலின் போது, எச்சில் மற்றும் சளியுடன் சேர்ந்து வைரஸ்கள் போன்ற எரிச்சலூட்டும் தொற்றுகள் மூக்கிலிருந்து வெளியேறும். இந்த வைரஸ்கள் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு பரவுவதைத் தடுக்க நம் கைகளால் அல்லது முழங்கையின் உள் பகுதியைக் கொண்டு மூக்கை மூட வேண்டும்.” என்று பி.எம்.ஜே. எனப்படும் மருத்துவ ஆய்விதழில் அறிக்கை வெளியானது. அதன் ஆசிரியர் டாக்டர். ராஸ்டெஸ் மிசிரோவ்ஸ் ஆவார். இதனால், தும்மல் ஒரு பாதுகாப்பு செயல்முறை என்றழைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிரிட்டனில் ஒருவர் தும்மலை அடக்கியதால் பல விளைவுகளை சந்தித்தார் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பிரிட்டனில் உள்ள டண்டீ நகரில் 30 வயதுடைய நபர் ஒருவர் கடுமையான கழுத்து வலியால் அவதிப்பட்டு நைன்வெல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தனக்கு தும்மல் ஏற்பட்டபோது அதனை அடக்குவதற்காக, மூக்கையும் வாயையும் தன் கைகளால் மூடியுள்ளார். இதனால், அவரது மூச்சுக்குழாயில் 2 மி.மீ. வரை காயம் ஏற்பட்டிருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது.
ஒருவர் தும்மும்போது வாய் மற்றும் மூக்கை மூடி அடக்கினால், மூச்சுக்குழாயின் மேல் பகுதியில் அழுத்தம் 20 மடங்கு அதிகரிக்கும் என டண்டீ பல்கலைக்கழக மருத்துவர்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட நபரை பரிசோதிக்கையில், அவருடைய தொண்டையிலிருந்து ‘கரகர’வென சத்தம் வருவதையும், அதனை அந்நபரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தும்மல் வந்த நேரத்தில், அந்நபர் சீட் பெல்ட் அணிந்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறார். மருத்துவர்களின் கூற்றுப்படி, அந்நபர் ஏற்கனவே ஒவ்வாமை மற்றும் தொண்டை புண் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால், ஒரு நபர் தும்மலை தேவையில்லாமல் அடக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், சில சமயங்களில் தும்மலை அடக்குவது உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.