அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் வந்த எச்சரிக்கை – ஈரான் அடிப்பணிய வேண்டும் என மிரட்டல்!
அணுசக்தி செறிவூட்டல் முதல் பாலிஸ்டிக் ஏவுகணைகள் வரையிலான பிரச்சினைகள் குறித்த தனது கோரிக்கைகளுக்கு தெஹ்ரான் இணங்கவில்லை என்றால், இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய ஊடகமான சேனல் 12 வெளியிட்டுள்ள செய்தியில் ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றால் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து சூசகமாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ட்ரம்ப் நிர்வாகம் மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இராணுவக் குவிப்பு ஈரானுக்கு எதிராக வரவிருக்கும் அமெரிக்கத் தாக்குதல் குறித்த அச்சத்தைத் தூண்டியுள்ளது. அத்தகைய தாக்குதல் பிராந்திய ஸ்திரமின்மை மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஈரானிய பிராந்திய நீர்நிலைகளில் இருந்து “முடிந்தவரை” விலகி இருக்குமாறு அமெரிக்க கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




