“அதுவொரு சின்ன மரணத்தின் ஒத்திகை” புதிதாக பிறந்தார் வைரமுத்து
இன்றைய காலக்கட்டத்தில் பல துறைகளில் பல்லாயிரக்கணக்கான புதிய இளைஞர் யுவதிகள் இடம்பிடித்துவிட்டனர்.
என்னதான் கவிப்பேரரசாக இருந்தாலும் ஒரு காலக்கட்டத்திற்குப்பின் ஒதுங்கியிருந்து புதியவர்களுக்கு இடம் கொடுக்கத்தான் வேண்டும்.
இந்த வகையில் ஒரு கலக்கட்டத்தில் கொடிகட்டிப்பறந்த வைரமுத்து தற்போது வாய்ப்புகள் பாதியாக குறைந்துவிடவே பொழுதை எவ்வாறு போக்குவது என்று யோசித்து வருகின்றார்.
தன் மீது எத்தனை முறைப்பாடுகள் கிசுகிசுக்கள் வந்தாலும் உடையாமல் இன்றுவரை தலைநிமிர்ந்து தனது கருத்துக்களை வெளியிடுபவர்தான் வைரமுத்து.
அந்த வகையில், அண்மையில் சோத்துப்பாறை அணைக்கு சென்றிருந்த அவர், அங்கு சென்றுவந்த பின் தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி ஒரு கவிதை எழுதி இருக்கிறார்.
“சோத்துப்பாறை போயிருந்தேன்
நீர்த்தேக்கத்தின் நீரோசை கேட்டேன்
அந்த ஓசை என்னை என்னென்னவோ செய்தது
கவிஞன் என்ற கர்வத்தைக் கழுவி முடித்தது
மூளைக்குள் ஒட்டியிருந்த ஒட்டடைகளை ஒற்றி எடுத்தது
என்னைப் பாதி மரணத்திற்குப் பழக்கப்படுத்தியது
அதன் கரையில் ஆலமரத்தடியில் அமர்ந்துவிட்டேன்
ஒரு மனிதன் விழித்திருக்கும் நேரமெல்லாம் தன்னையே நினைத்துக் கொண்டிருத்தல் தவறு;
நித்தம் ஒருபொழுதேனும் நினைவொழிய வேண்டும்
காலியாகாத பாத்திரத்தில் புதியதை நிரப்ப முடியாது
தன்னை மறந்து தன் நாமம் கெட்டுக் காலம் கடந்து கருத்தழிய வேண்டும்
அந்த ஓசை அப்படியோர் உபாசனை செய்தது
அதுவொரு மன மருத்துவம்
அதை எதிர்பார்த்துச் செல்லவில்லை; ஆனால் அது நேர்ந்தது
அதுவொரு சின்ன மரணத்தின் ஒத்திகை; சுண்டுவிரல் மட்டும் சொர்க்கத்தில் நுழைந்துவந்த அனுபவம்
எதில் வேண்டுமானாலும் இது நேரலாம்
சிறு தூறலின் சிணுங்கலில், வானவில் துண்டில், கடக்கும் மேகங்களின் உருவ மாற்றத்தில், இருளின் ஆழ்கடலில், முதல் வெளிச்சத்தின் முணுமுணுப்பில், உதிரும் சருகில், அதிரும் பூமியில் இது நேரலாம்
எனக்கு நீரோசையில் நேர்ந்தது நேற்று
கொஞ்ச நேரம் இறந்து பிறந்தேன்
இன்று எனக்கு வயது ஒருநாள்”





