கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள்,குடியேறிக்களுக்கு புதிய வெளியேறும், நுழைவு விதிகள் ; அமெரிக்கா அறிவிப்பு
குடியேறியவர்கள் மற்றும் கிரீன் கார்ட் வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்குள் வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
அதாவது குடியேறியவர்கள் மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்காவுக்கு வரும் போதும், செல்லும் போதும், தங்களது புகைப்படங்கள் மற்றும் கைரேகை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் மட்டும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைகளிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நடைமுறை வருகிற டிசம்பர் 26ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த புதிய விதியின் கீழ், அமெரிக்காவிற்குள் வரும் போது அல்லது வெளியேறும்போது அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களிடம் இருந்து புகைப்படங்கள் மற்றும் பிற உயிரியல் தகவல்கள் சேகரிக்கப்படும்.
முன்பு 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 79 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த நடைமுறை விலக்களிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இது அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்படும் போது போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து செல்பவர்களை எளிதில் தடுக்க முடியும். அதேபோல, இந்த நடவடிக்கையின் மூலம் எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதோடு, ஆள்மாறாட்டம் மற்றும் விசா காலம் முடிவடைந்தும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





