இலங்கையில் அதிக கணினி அறிவைக் கொண்டும் வேலையற்ற இளைஞர் யுவதிகள்
இலங்கையில் வேலையற்ற இளைஞர் யுவதிகளில் சுமார் 80 சதவீதமானோர் அதிக கணினி அறிவைக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் இதனை தெரிவிக்கின்றன.
அந்த திணைக்களம் அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கையில் கணினி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு பற்றிய 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கணினி கல்வியறிவு 2022ஆம் ஆண்டில் 36சதவீதமாக பதிவாகியுள்ளது. இது 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.7 சதவீத வளர்ச்சியாகும் என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற மக்களின் கணினி கல்வியறிவு 48.9 சதவீதமாக உள்ளதுடன் கிராமப்புறங்களில் 34.6 சதவீதமாக உள்ளது.
பாலினத்தின் அடிப்படையில் ஆண்களின் கணினி கல்வியறிவு பெண்களை விட அதிகமாக உள்ளது.
2022ஆம் ஆண்டில், ஆண்களின் கணினி கல்வியறிவு 37.3 சதவீதமாகவும், பெண்களின் கணினி கல்வியறிவு 34.8 சதவீதமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.