ரஷ்யாவின் காட்டுத்தீயில் சிக்கிய நால்வருக்கு நேர்ந்த சோகம்!
ரஷ்யாவின் உரால் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கூர்கானில் பரவிய காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன.
இந்நிலையில் வெர்த்லோவ் பகுதியில் 54 ஆயிரம் பரப்பளவில் அரியவகை மரங்கள், செடி, கொடிகள் தீக்கிரையாகின. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் 4 ஆயிரத்து 800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெர்த்லோவ் பகுதியில் துப்பாக்கி வெடிமருந்து குடோனில் பற்றிய தீ, உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு கருதி அருகில் வசித்தவர்கள் அனைவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோடைக்காலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது இயற்கை என்றாலும் இம்முறை தீ பரவியதற்கு சதித்திட்டம் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அமைச்சர் அலெக்சாண்டர் குரென்கோவ் தெரிவித்துள்ளார்.