மனித மூளைக்குள் சிறிய சிப்! மருத்துவத் துறையை பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பு
உலகில் மிகவும் சிறிய அளவைக் கொண்ட MOTE என்ற நுண்ணிய கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்மூலம் மனிதர்களின் நரம்பியல் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தையே மாற்ற முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரிசிப் பருக்கையின் அளவைக் கொண்ட இந்தச் சிப், அதிநவீன மூளை உட்பொருத்தும் கருவி ஆகும்.
சுமார் 300 மைக்ரான் நீளம் கொண்ட இந்தச் சிப், உலகின் மிகச்சிறிய வயர்லெஸ் நரம்பியல் இம்ப்லாண்ட் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சிப், மூளையின் மின் செயல்பாடுகளை அளந்து, அந்தச் சமிக்ஞைகளை அகச்சிவப்பு ஒளித் துடிப்புகளாக மாற்றி, மூளை மற்றும் மண்டை ஓடு வழியாக ஊடுருவி, வெளியே உள்ள நினைவகத்திற்குத் தகவலை அனுப்புகிறது.
இந்தச் சிப் அலுமினியம் காலியம் ஆர்சனைடு என்ற செமிகண்டக்டரால் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள மூளை உள்வைப்புகளில் உள்ள பல சிக்கல்களை MOTE என்ற இந்தச் சிப் தீர்த்து வைப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பழைய உலோக இம்ப்லாண்ட்களைப் போலல்லாமல், இது MRI ஸ்கானின் போது எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிப் முதன்முறையாக எலிகளுக்குப் பொருத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, மூளையில் எரிச்சல் அல்லது திசுக்களின் எதிர்ப்பை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சாதனம் மூளையுடன் மட்டுமல்லாமல், தண்டுவடம் போன்ற உடலின் நுட்பமான பாகங்களில் இருந்தும் சிக்னல்களைப் பதிவு செய்ய உதவும்.
இந்தக் கண்டுபிடிப்பு நரம்பியல் கண்காணிப்பில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.




