இந்தோனேசியாவில் இஸ்லாமிய உறைவிடப் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலி, 38 பேர் மாயம்
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இஸ்லாமிய உறைவிடப் பள்ளி இடிந்து விழுந்ததில் குறைந்தது மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டதாகவும், டஜன் கணக்கானவர்களைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணி நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 பேர் என்றும், அதில் 99 பேர் உயிர் பிழைத்தவர்கள் என்றும், 3 பேர் உயிரிழந்ததாகவும் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகமைத் தலைவர் முகமது சயாஃபி தெரிவித்தார்.
கட்டிடம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியதாக நம்பப்படும் 38 பேரை மீட்புப் பணியாளர்கள் தேடி வருவதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இடிபாடுகளில் இருந்து பதினொரு பேர் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் 91 பேர் தப்பிப்பிழைத்துள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில், கிழக்கு ஜாவாவின் சிடோர்ஜோவில் உள்ள அல்-கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மாணவர்கள் மதிய தொழுகைக்காக ஒன்றுகூடியபோது இடிந்து விழுந்தது.
கட்டிடத்தின் நான்காவது மாடியில் பணியாளர்கள் கான்கிரீட் வேலை செய்து கொண்டிருந்தபோது பள்ளியின் அடித்தளத் தூண்கள் இடிந்து விழுந்ததாகவும், இதனால் டஜன் கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது இந்தோனேசியாவில் ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறை கட்டிடம் இடிந்து விழுந்த நிகழவாகும் .
செப்டம்பர் 3 ஆம் தேதி மேற்கு ஜாவாவின் போகோர் மாவட்டத்தில் குர்ஆன் ஓதுதல் நடைபெற்ற ஒரு சமூகக் கூடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.





