இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ நன்கொடை
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இலங்கை, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவசியமான உடனடி உதவிகளை வழங்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் 2.4 மில்லியன் யூரோ நிதியை விடுவித்துள்ளது.
அதில் 1.8 மில்லியன் யூரோ நிதி இலங்கையில் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசியமான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், சர்வதேச செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்களின் பேரவையின் உடனடி அனர்த்த உதவி நிதியத்தின் ஊடாக உதவிகளை வழங்குவதற்கென அளிக்கப்பட்டிருக்கும் 500,000 யூரோ நிதியும் இதனுள் உள்ளடங்குவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.





