வசூலில் கில்லியாக இருக்கும் ‘தலைவன் தலைவி’…

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இயக்குனர் பாண்டிராஜும் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் தலைவன் தலைவி. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் நடிகைகள் ரோஷினி, தீபா, மைனா நந்தினி, நடிகர்கள் செம்பன் வினோத், ஆர்.கே.சுரேஷ், சரவணன், செண்ட்ராயன், யோகிபாபு, பாபா பாஸ்கர், மாரிமுத்து என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக சுகுமார் பணியாற்றி இருக்கிறார்.
வழக்கமாக பேமிலி செண்டிமெண்ட் படங்களை எடுத்து வரும் பாண்டிராஜ். இப்படத்தில் கணவன், மனைவி இடையேயான மோதலையும் காதலையும் மிகவும் அழகாகவும் யதார்த்தமாகவும் காட்சிப்படுத்தி இருந்தார். பெரும்பாலான காட்சிகள் ரியல் லைஃபோடு ஒன்றிப் போகும் வகையில் இருந்ததால் இப்படத்தை ஃபேமிலி ஆடியன்ஸ் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஆகாச வீரனாகவும், அவரது மனைவி பேரரசியாக நித்யா மேனனும் நடித்துள்ளனர். இப்படத்தில் யோகிபாபுவின் காமெடிகள் வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
தலைவன் தலைவி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் இப்படத்திற்கான காட்சிகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே 5.2 கோடி வசூலித்தது. பின்னர் இரண்டாவது நாளில் 7.85 கோடியாக உயர்ந்த வசூல், மூன்றாம் நாளில் புதிய உச்சமாக இந்தியாவில் மட்டும் 9.7 கோடி வசூலித்தது. இந்தியா மட்டுமின்றி ஓவர்சீஸிலும் மாஸ் காட்டிய இப்படம் ரிலீஸ் ஆன முதல் மூன்று நாட்களிலேயே 25 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. அதிவேகமாக 25 கோடி வசூலித்த விஜய் சேதுபதி படம் என்கிற சாதனையையும் தலைவன் தலைவி படைத்தது.
இந்த நிலையில் தலைவன் தலைவி திரைப்படத்தின் நான்காம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நேற்று திங்கட்கிழமையன்று ரூ.3 கோடி வசூலித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமையோடு ஒப்பிடுகையில் இது கம்மியான வசூலாக இருந்தாலும், வார நாட்களில் புதுப்படங்கள் இவ்வளவு வசூலிப்பது மிகவும் அபூர்வமானது.
இதன்மூலம் நான்கே நாட்களில் இந்தியாவில் மட்டும் 25 கோடி வசூலை கடந்து உள்ளது தலைவன் தலைவி. இதுதவிர வெளிநாடுகளில் மட்டும் இப்படம் நான்கு நாட்களில் ரூ.10 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் இந்த வார இறுதியில் 50 கோடி வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.