முன்னாள் மாணவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி ; கனடா அறிவிப்பு
கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த முன்னாள் மாணவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் பலருடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள்.இந்திய தரப்பிலிருந்தும் கனடா தரப்பிலிருந்தும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து, கனடா அரசு அந்த விடயத்தை சட்டப்பூர்வமாக அணுகிவருகிறது.
இந்நிலையில், அந்த முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவருடைய வழக்கும் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் வரை, அவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் வழங்க கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து பேசிய கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, விசாரணையில் ஒருவர் உண்மையாகவே கல்வி கற்கும் நோக்கத்துடன் கனடா வந்திருப்பது தெளிவாகத் தெரியவரும் பட்சத்தில், அத்துடன், தனது ஆவணங்கள் மோசடியானவை என்பது குறித்தும் அவருக்கு உண்மையாகவே தெரியாது என்றால், அத்தகையவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
மோசடியுடன் தொடர்பில்லாதவர்கள் நாடுகடத்தப்படமாட்டார்கள் என்று கூறியுள்ளார் அவர்.மேலும், நல்ல நோக்கத்துடன் கனடா வந்த மாணவர்களுக்கு கனடாவுக்குள் நுழைய ஐந்து ஆண்டுகள் தடையும் கிடையாது என்பதை உறுதிசெய்வதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதே நேரத்தில், உண்மையாகவே கல்வியைத் தொடரும் நோக்கமின்றி வந்துள்ள சிலருக்கு மோசடியில் பங்கிருப்பதாக தெரிவித்த Sean Fraser, அவர்கள் தப்பமுடியாது என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.