மேலும் 40,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை திட்டம்!
அணிசேரா நாடு என்பதால், இலங்கை மற்ற நாடுகளின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இல்லை என, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்ற மன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல்களுக்கு முடிவு கட்டும் எதிர்பார்ப்புடன் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது வீண் என தெரிவித்தார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடர்பாக, அரசாங்கம் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு விவாதத்தைத் தொடர்ந்து இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
இஸ்ரேலுடனான அரசாங்கத்தின் உறவுகளை பாதுகாக்கும் நாணயக்கார, இலங்கையர்கள் மத்திய கிழக்கில் வேலை தேடும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்க முயற்சிப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் வாக்குகளுக்காக பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டினார்.
விருந்தோம்பல், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு மார்ச் மாதம் இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்கள் உடன்படிக்கைக்கு வந்தன.
சுமார் 40,000 இலங்கை வேலை தேடுபவர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகவும் அமைச்சர் நாணயக்கார தெரிவித்துள்ளார்.