கருங்கடல் பகுதியில் கொடூர தாக்குதல் நடத்திய ரஷ்யா – 60,000 டன் தானியங்கள் சேதம்
உக்ரேனின் கருங்கடல் பகுதியில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலில் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலினால் சுமார் 60,000 டன் தானியங்கள் சேதமடைந்துள்ளன. அவை ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த தானியங்கள் என்று கீவ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக உணவுப் பாதுகாப்புக்கு மீண்டும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். தாக்குதலைத் தொடர்ந்து, கோதுமையின் விலை கிட்டத்தட்ட 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
கருங்கடலில் உக்ரேன் தானியங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வகைசெய்யும் ஓராண்டு உடன்பாட்டை ரஷ்யா முடிவுக்குக் கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து Odesa வட்டாரம் தாக்கப்பட்டது. அங்குள்ள மூன்று துறைமுகங்கள் உக்ரேனுக்காகச் செயல்பட்டுவந்தன.
இனிமேல் அந்தப் பகுதியில் செல்லும் உக்ரேனியக் கப்பல்கள் குறிவைக்கப்படும் என்று மொஸ்கோ தெரிவித்துள்ளது. உக்ரேனின் மேற்கத்தியப் பங்காளித்துவ நாடுகள், ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
உலகின் ஆக ஏழ்மையான மக்களை இந்நிலவரம் பாதிக்கும், உக்ரேனிய தானியங்களை அவர்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) பறித்துக்கொண்டதாக ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.
உணவுப் பாதுகாப்பில் ரஷ்யா பொறுப்பின்றிச் செயல்படுவதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சும் குறைகூறியது.