இந்த வருடமும் ஆஸ்கர் மேடையில் மீண்டும் கெத்து காட்டிய ‘RRR’!
இந்திய சினிமாவைப் பெருமைப்படுத்தும் விதமாக கடந்த வருடம் ஆஸ்கர் மேடையில் ‘RRR’ திரைப்படம் விருது பெற்றது. அந்த வகையில், இந்த வருடமும் ‘RRR’ திரைப்படம் ஆஸ்கர் மேடையில் குறிப்பிடப்பட்டுள்ளது படக்குழுவினரையும், இந்திய ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
ஆஸ்கர் மேடையில் ஹாலிவுட் படங்களே அதிக ஆதிக்கம் செலுத்துகிறது, இந்திய சினிமாவுக்கு ஆஸ்கர் எட்டாக்கனியாக ஆஸ்கர் இருக்கிறது என்ற ஆதங்கம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு இல்லாமல் இல்லை. அத்திபூத்தாற்போல, சில படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும் விருது வெல்வது குறைவுதான். இந்தக் கனவை ஏ.ஆர்.ரஹ்மான் தகர்த்திருந்த நிலையில், கடந்த வருடம் ‘RRR’ திரைப்படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடலுக்காக சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருது வென்று சாதித்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண், அலியாபட் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். ராஜமெளலி இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.
இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடலும், அதன் நடன அசைவுகளும் மேற்கத்திய பார்வையாளர்களை கவர்ந்திருந்தது.
இந்நிலையில், இந்த வருடமும் ஆஸ்கர் விழா மேடையில் உலக சினிமாக்களின் சிறந்த ஸ்டண்ட் காட்சிகளுக்கான ட்ரிப்யூட்டாக காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் ‘RRR’ படத்தின் இரண்டு ஸ்டண்ட் காட்சிகளும், ‘நாட்டு நாட்டு’ பாடலும் இடம் பெற்றிருந்தது ஹைலைட். இதைக் குறிப்பிட்டு படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியையும், அகாடெமிக்குத் தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.