மீண்டும் ஒரு பான் இந்தியா படத்தில் “காந்தாரா” நாயகன்

கன்னட நட்சத்திரம் ரிஷப் ஷெட்டி இப்போது பான் இந்தியா நாயகனாக மாறி வருகிறார். அவர் `காந்தாரா` படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தது அனைவரும் அறிந்ததே. கன்னடத்தில் வெற்றி பெற்ற இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.
மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக `காந்தாரா 2` வரவுள்ளது. இந்தப் படம் அக்டோபர் 2 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், ரிஷப் ஷெட்டி `ஜெய் ஹனுமான்` என்கிற மற்றுமொரு பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். ஹனுமன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரசாந்த் வர்மா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பெரிய பான் இந்தியா படமாக, ஹனுமானின் கதையை மையமாகக் கொண்டு உருவாகிறது.
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு பான் இந்தியா படத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்கவுள்ளார். மற்றொரு வீரக் கதையை மையமாகக் கொண்ட படத்தில் நாயகனாக நடிக்கிறார். படக்குழுவும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடிக்கிறார். `ஒரு கற்பனை கலந்த வரலாற்று ஆக்ஷன் படத்திற்காக சித்தாராவுடன் கைகோர்த்துள்ளார் ரிஷப் ஷெட்டி. 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் கொந்தளிப்பான வங்காள மாகாணத்தில் ஒரு கிளர்ச்சியாளரின் எழுச்சியை மையமாகக் கொண்டது இந்தப் படத்தின் கதை.
நல்ல கதாசிரியர் என்ற பெயர் பெற்ற, திறமையான அஷ்வின் கங்கராஜு இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த முறை அவர் ஒரு அற்புதமான கதையுடன் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கத் தயாராகி வருகிறார்` என்று படக்குழு தெரிவித்துள்ளது.
படக்குழு மேலும் கூறுகையில், `இந்தப் படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்படுகிறது. தெலுங்கு, கன்னடத்துடன் தமிழ், இந்தி, மலையாள மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை ஸ்ரீகர் ஸ்டுடியோஸ் வழங்க, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் பட நிறுவனங்கள் சார்பில் சூர்யதேவர நாக வம்சி, சாய் சௌஜன்யா ஆகியோர் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். முன்னணி நடிகர்கள், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் பணியாற்றவுள்ளனர்` என்று தெரிவித்துள்ளது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.