மணிப்பூர் விவகாரம்! மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட தகவல்
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது.
இதனால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண மத்திய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவை இன்று கூடியதும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பதில் அளித்து இரு அவைகளிலும் மணிப்பூர் தொடர்பான அறிக்கையை சமர்பிப்பார் என்றும் அவர் கூறினார்.