கல்வித்துறையை நவீனமயப்படுத்த ஜனாதிபதி ரணில் திட்டம்!
இலங்கையில் கல்வித்துறையை நவீனமயப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
எதிர்வரும் பத்து ஆண்டுகளில் கல்வித்துறையை நவீனமயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவ சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறையை நவீனமயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மறுசீரமைப்புச் செயற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற திறன் மற்றும் தொழில் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில் சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட நிதியை கல்விக்காக செலவிட்டிருந்தால் ஆசியாவின் மிகச் சிறந்த கல்வித்துறை இலங்கை வசமாகியிருக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குழப்பகரமான சூழலில் முடங்கியிருற்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் புதிய பாதீட்டு திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டியது அவசியமாகிறது.
அதேபோன்று, நாட்டின் செலவுகளையும் உரிய முறையில் முகாமைத்துவம் செய்திருக்கலாம்.
கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் செலவினங்கள் தொடர்பில் பார்க்கின்ற போது, கல்விக்கு பணம் ஒதுக்கீடு செய்யாமல் சில அரச நிறுவனங்களுக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.