நாட்டை கைப்பற்ற போட்டியிடும் எதிர்கட்சிகள் : காட்டமாக விமர்சித்த ருவான் விஜேவர்தன!
நாடு ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ள நிலையில், அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட குழுக்கள் போட்டியிட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மத்திய பலமன்ற கூட்டத்தில் நேற்று (14) உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போது ஜனாதிபதியாக பதவியேற்றார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் ஆகியோருக்கு பிரதமர் பதவியை வழங்கினார்.
ஆனால், அவர்கள் அனைவரும் மறுத்துவிட்டனர். ஐ.தே.க தலைவர் பிரதமர் பதவியை ஏற்க வேண்டியிருந்தது, அவர் தேசத்திற்கு ஒருவித ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்தார்.
ஆனால், இன்று நாசவேலை மூலம் ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட சில குழுக்கள் முயற்சித்து வருகின்றன’ எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, நாடு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ள நிலையில் இனவாதிகள் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர் எனவும், இந்த குழுக்களை அகற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.