“பராசக்தி” பெயருக்கு புது வடிவில் வந்த பிரச்சினை… பராசக்தியின் அருள் யாருக்கு கிட்டும்?
பராசக்தி படத்தின் தலைப்பைப் பயன்படுத்துவதில், சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி இடையே சமரசம் ஏற்பட்ட நிலையில், தங்களுடைய படத் தலைப்பை யாரும் பயன்படுத்தக் கூடாது என நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சினிமா என்ட்ரி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனம், என அரசியல் ரீதியாகவும், திரைத்துறை கண்ணோட்டத்திலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட படம் பராசக்தி.
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் 25-ஆவது படத்திற்கு “பராசக்தி” என பெயர் வைக்கப்பட்டது.
பராசக்தி பட தலைப்பை சிவகார்த்திகேயனுக்கு வழங்கியதாகவும் ஏவிஎம் நிறுவனம் வாழ்த்து தெரிவித்தது.
இதனையடுத்து, சிவகார்த்திகேயன் படத்தின் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் நேரில் சந்தித்து கை கோர்த்த நிலையில், “தமிழ் தீ பரவட்டும்” என்ற வாசகத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி பட போஸ்டர் வெளியானது. இதனால், படத்தலைப்பு பிரச்னை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.
ஆனால், திடீர் திருப்பமாக, பராசக்தி படத்தின் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அப்படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பெருமாள் முதலியார் பராசக்தி படத்தை தயாரித்ததாகவும், சில பகுதிகளின் விநியோக உரிமை மட்டுமே ஏவிஎம் வசம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களும், சிவாஜியின் உணர்ச்சிகரமான நடிப்பும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நிலையில், விரைவில் “பராசக்தி” படம் பவள விழா காண உள்ளதாக நேஷனல் பிக்சர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
எனவே, அப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட திட்டமிட்டு இருப்பதாகக் கூறியுள்ள தயாரிப்பு நிறுவனம், பராசக்தி படத்தின் தலைப்பை வேறு யாரும் தங்கள் படங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
பராசக்தி படத்தின் தலைப்பை யார் பயன்படுத்துவது என்பதில் தொடங்கிய பிரச்னை, தற்போது பராசக்தி படத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்ற வினாவில் வந்து நிற்கிறது. பராசக்தியின் அருள் யாருக்கு கிட்டும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…