பாரிய நிதி மோசடி -அதிரடியாக நாடு கடத்தப்பட்ட 125 சீனப் பிரஜைகள்
இலங்கையில் இணையதளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு,
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 125 சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சீன அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட
விசேட விமானம் மூலம் அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி அநுராதபுரம் பகுதியில் உள்ள பல விடுதிகளில் தங்கியிருந்து இணையதளம் ஊடாக நிதி மோசடிகளில்
ஈடுபட்டிருந்த நிலையில், குறித்த சீனப் பிரஜைகள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினராலும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினராலும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சுற்றுலா மற்றும் வர்த்தக விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகை தந்து, குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக
தங்கியிருந்தமை விசாரணையில் தெரியவந்தது
இதனைத் தொடர்ந்து இவர்கள் வெலிசரவில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு குறித்த சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டதுடன், அவர்களுடன் இலங்கையின் குடிவரவு குடியகல்வு
திணைக்களத்தைச் சேர்ந்த 6 அதிகாரிகள் கொண்ட குழுவொன்றும் சீனா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.





