“சில சொம்பு தூக்கிகளோட பருப்பு எல்லாம் என்ட்ட வேகாது…” மன்சூர் அலிகான் பதிலடி
திரைப்படங்களில் பாலியல் பலாத்கார காட்சிகள் தொடர்பான நடிகர் மன்சூர் அலிகானின் கீழ்த்தரமான பேச்சுக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில், அதற்கு மன்சூர் அலிகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, பல முன்னணி நடிகர்களுடன் கொடூர வில்லனாக நடித்து கவனம் பெற்றவர் மன்சூர் அலிகான். வில்லத்தனமான நடிப்பிற்கு புகழ்பெற்ற மன்சூர் அலிகான், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இதன் வெளிப்பாடாக, நடிகர் விஜயின் லியோ படத்தில் இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகானை லோகேஷ் நடிக்க வைத்தார். லியோ படத்தில் தனக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்த்த மன்சூர் அலிகானுக்கு, ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனால், அதிருப்தி அடைந்த மன்சூர் அலிகான், லோகேஷ் கனகராஜை விமர்சித்து இருந்தார். படக்குழுவினருடன் முரண்பாடு இருந்தாலும், லியோ படத்தின் வெற்றி விழாவில் மன்சூர் அலிகான் மேடையில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதில், தனக்கே உரிய பாணியில், பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வகையில் மன்சூர் அலிகான் பேசினார். இருப்பினும், அவரது வழக்கமான பேச்சுகளுடன் ஒப்பிடுகையில், இது ஏதோ பரவாயில்லை என்ற ரீதியில் இருந்தது. ஆனால், அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், லியோ படத்தில் பலாத்கார காட்சியே தனக்கு கிடைக்கவில்லை என பிறர் முகம் சுழிக்க வைக்கும் தனது மனக் குமுறலை வெளிப்படுத்தினார்.
இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகை த்ரிஷா, இதற்கு தனது கண்டனங்களை தெரிவித்தார். தொடர்ந்து இந்த சர்ச்சை பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மன்சூர் அலிகான் இதற்கு விளக்கமளித்துள்ளார். அதில், அய்யா பெரியோர்களே திடீர்னு த்ரிஷாவை நான் தப்பா பேசிட்டேனு என் பொன்னு பசங்க வந்த செய்திகள அனுப்பினாங்க. என் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில், வரும் தேர்தலில் ஒரு பிரபல கட்சி சார்பாக போட்டியிடுகிறேன் என்று சொன்ன வேளையில் வேண்டுமென்றே நல்லா எவனோ கொம்பு சீவி விட்டுருப்பதாக தெரிவித்துள்ளார்.