கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் வீட்டில் பெரும் சோகம்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
அவரின் இறுதிச்சடங்கு, ஜேபி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
தாயை பறிகொடுத்து சோகத்தில் தவித்து வரும் நடிகர் கிச்சா சுதீப் தன் தாய் மறைவு குறித்து உருக்கமான பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
எனக்கு பாரபட்சமின்றி அன்பு காட்டி என் வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்த மனித வடிவிலான கடவுள். என்னுடைய முதல் ரசிகை. என்னுடைய மோசமான படங்களையும் விரும்பியது என் தாய் மட்டுமே. என்னுடைய வலிகளை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை. இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 24 மணி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும், என் விடியல் என் தாயின் ‘குட் மார்னிங்’ மெசேஜில் தான் ஆரம்பிக்கும். அப்படி அவரிடமிருந்து கடைசியாக வெள்ளிக்கிழமை (அக்.18) தான் எனக்கு மெசேஜ் வந்தது. அடுத்த நாள் எனக்கு எந்த மெசேஜும் வரவில்லை. இத்தனை வருடங்களில் எனக்கு என் அம்மாவிடமிருந்து மெசேஜ் வராமல் இருந்தது இதுவே முதன் முறை.
இதையடுத்து, போன் செய்து பேசினேன் இருவரும் பிக்பாஸ் தொடர்பான சனிக்கிழமை எபிசோடுக்காக பேசிக் கொண்டிருந்தோம். அதனால் நேரம் போனதே தெரியவில்லை. நான் பிக்பாஸ் ஸ்டேஜுக்கு செல்வதற்கு முன் என் அம்மா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்ததால், சகோதரியிடமும், மருத்துவரிடமும் பேசிவிட்டு மீண்டும் பிக்பாஸ் மேடைக்குச் சென்றேன்.
பிக்பாஸ் மேடையில் சில பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டு இருந்தேன், ஆனால், என் மனதில் அம்மாவை பற்றிய எண்ணமே ஓடிக்கொண்டிருக்கிறது.
ஏற்றுக்கொண்ட வேலையை முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியால் வார்த்தைகள் அற்று முதன்முறையாக மேடையில் தவித்து நின்றேன். ஷூட்டிங் முடிந்த பின்பு நான் மருத்துவமனைக்குச் சென்றேன். அம்மா வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு இருந்தார். ஆனால், சில மணி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. என்னால் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நான் ஷூட்டிங் செல்வதற்கு முன்பு என் அம்மா என்னை கட்டியணைத்து அனுப்பிவைத்தார். வந்து பார்க்கும்போது அவர் இல்லை. என் வாழ்வின் விலைமதிக்க முடியாத ஒன்று என்னை விட்டு சென்றுவிட்டது. என்று மிகவும் கவலையுடன் பதிவிட்டுள்ளார்.