15,000 பேரை ஆட்குறைப்பு செய்யும் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல்!
தனது ஊழியரணியில் 15 சதவீத்த்தினரை, அதாவது 15,000 பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக இன்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
வரும் 2025ஆம் ஆண்டிற்குள் செலவில் பத்து பில்லியன் டொலரைக் குறைக்க வேண்டும் என அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது.
ஆட்குறைப்பு குறித்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) இன்டெல் தன் ஊழியர்களுக்குக் கடிதம் அனுப்பியது.
“எதிர்பார்த்த அளவிற்கு வருவாய் உயரவில்லை. செயற்கை நுண்ணறவு (ஏஐ) போன்ற ஆற்றல்மிக்க தொழில்நுட்பங்களின்மூலம் இன்னும் முழுமையான பலன் கிட்டவில்லை,” என்று அக்கடிதத்தில் இன்டெல் தலைமை நிர்வாக அலுவலர் பேட் ஜெல்சிங்கர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020 – 2023 காலகட்டத்தில் இன்டெல் ஊழியர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் கூடியது. அதே காலகட்டத்தில், அதன் ஆண்டு வருமானம் $24 பில்லியன் குறைந்தது.
சென்ற 2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டை ஒப்புநோக்க, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் இன்டெல் நிறுவனத்தின் வருவாய் 1% சரிவுகண்டது.
பேரளவு ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ள இன்டெல் நிறுவனம், விருப்பப்படும் ஊழியர்கள் பணியிலிருந்து விலகும் வாய்ப்பையும் வழங்கவுள்ளது. அத்துடன், தகுதியுள்ள ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஓய்வுச் சலுகையையும் அது அறிவிக்கவுள்ளது.