‘லியோ’ 7 மணி காட்சிக்கு வாய்ப்பே இல்லை… புதுவைக்கு படையெடுக்கும் ரசிகர்கள்
அக்டோபர் 19-ஆம் தேதி, ரிலீஸ் ஆக உள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு, அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் லலித் குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று காலை முதல் வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அனிதா சுமந்த், நான்கு மணி காட்சிக்கு மறுப்பு தெரிவித்ததோடு 7 மணி காட்சி வேண்டுமானால் தமிழக அரசிடம் பேசி அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தி இருந்தார்.
அத்தோடு இந்த விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர்களின் நிலைப்பாடு என்ன என்பதை மாலை 4 மணிக்குள் தெரிவிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ள திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர், அரசு வழங்கி உள்ள ஐந்து காட்சிகள் போதுமானது எனவும்… காலை 9 மணி முதல் அதிகாலை ஒரு மணிக்குள் ஐந்து காட்சிகள் திரையிட போதுமான நேரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் அதிகாலை காட்சிகள், 7மணி காட்சிகள் தேவையற்றது இதனால் திரையரங்கின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், தமிழக அரசின் உத்தரவை பின்பற்றுவதே சரியாக இருக்கும் என பதில் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த பதில் மனுவால்… ‘லியோ’ திரைப்படம் 7 மணி காட்சி வெளியிட வாய்ப்பே இல்லை.
தமிழகத்தில் 7 மணி காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், புதுவை அரசு தளபதி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, காலை 7 மணி கட்சிக்கு அனுமதி அளித்துள்ளதால்… பல ரசிகர்கள் 7 மணி கட்சியை பார்க்க புதுவைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.