“புலிகள் கொழும்பில் தாக்குதல் நடத்தியபோதுகூட பொருளாதாரம் முடங்க இடமளிக்கவில்லை”
“நாட்டில் கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றின்போது ஜே.வி.பியினர் பொறுப்பற்ற விதத்திலேயே செயல்பட்டனர்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன், தாம் தற்போது எதிரணியில் இருந்தாலும் நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடமாட்டோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam கூறினார்.
கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டவேளை அதனை வைத்து ஜே.வி.பியினர் அரசியல் செய்தனர்.
நாம் அவ்வாறு செயல்படபோவதில்லை. அரசியலைவிட தாய்நாடுதான் எமக்கு முக்கியம்.
அடுத்த தேர்தலில் ஜே.வி.பியினரால் ஆட்சிக்கு வரமுடியாது. எமக்குதான் மக்கள் ஆட்சியை வழங்குவார்கள். எனவே, நாடு நெருக்கடியை சந்திப்பதை நாம் விரும்பவில்லை.
போர் காலத்தில் குண்டுகள் வெடித்தன. புலிகள் கொழும்புக்குவந்து தாக்குதல் நடத்திவேளைகூட நாம் மக்களுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளிக்கவில்லை.
பொருளாதாரத்தைகூட முறையாக முகாமை செய்வோம். இவ்வாறு சொல்லில் அல்லாமல் செயலில் காட்டிய அனுபவம் எமது கட்சிக்கு உள்ளது.” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.





