குடலை பாதிக்கும் ஆபத்தான உணவுகளும் பழக்கங்களும்

நம் உடல் ஆரோக்கியத்திற்கு, நமது குடல் உள்ளிட்ட செருமான அமைப்புகள் சிறப்பாக இருக்க வேண்டும். இதன் மூலம் 90 சதவிகித உடல்நல பிரச்சனைகளை தவிர்த்து விடலாம். குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலே, நாம் உண்ணும் உணவு சரியாக ஜீரணிக்கப்பட்டு, ஊட்டச்சத்துக்கள் சரியான முறையில் உடலில் கிரகிக்கப்பட்டு, உடலும் மனமும் பிட்டாக இருக்கும்.
குடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவில்லை என்றால், உடல் நோய்களின் கூடாரமாக மாறிவிடும். மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவது முதல், நோய் எதிர்ப்பு சக்தியை குறைவது வரை பல்வேறு உடல்நல பாதிப்புகளை எதிர் கொள்ள நேரிடலாம். அந்த வகையில் குடல் ஆரோக்கியத்தை பலவீனப்படுத்தும், செரிமான அமைப்பை காலி செய்யும் 5 உணவுகள் மற்றும் பழக்கங்களை (Health Tips) பற்றி இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகள்
இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையில், பாரம்பரிய உணவுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. பீட்சா பர்கர், ரெடி டு ஈட் வகை உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை, தவிர்க்க முடியாத உணவுகள் என்ற இடத்தை பிடித்து விட்டன. இது மிக மிக ஆபத்தானது. இந்த வகை உணவுகளில் நார்ச்சத்து என்பது மருந்துக்கும் இருக்காது. அதோடு இதில் கலோரிகளும் சர்க்கரையும், சோடியமும் அதிகம் இருக்கும். இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிப்பதோடு, உச்சி முதல் பாதம் வரை பல்வேறு உடல்நல பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.
நார்ச்சத்து உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருத்தல்
நமது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக பராமரிக்க நார்ச்சத்து மிக மிக அவசியம். அதற்கு காய்கறிகள் பழங்கள் முழு தானியங்கள் ஆகியவை, அனைத்து நேர உணவுகளிலும் இடம் பெற வேண்டும். இல்லையென்றால் மலச்சிக்கல் வாயு, குடல் அழற்சி உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல்
மருத்துவர் ஆலோசனை இன்றி எந்தவித மருந்தையும் எடுத்துக் கொள்வது மிகவும் தவறு. சிலர் சளி காய்ச்சல் அலர்ஜி போன்றவற்றிற்கு, மருத்துவரை நாடி ஆலோசிக்காமல், மருந்து கடைகளில் சென்று, தானாகவே ஆன்டிபயாட்டிக் என்னும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். இது குடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலவீனப்படுத்தும்.
உடல் உழைப்பு அல்லது செயல்பாடுகள் இல்லாத நிலை
நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், கண்டிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அலுவலகங்களில் பணிமாற்றுபவர்கள், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஐந்து நிமிடமாவது நடக்க பழகிக்கொள்ள வேண்டும். நாற்காலியில் அமர்ந்தபடியே நீட்சி பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். இல்லையென்றால் செரிமான பிரச்சனைகள், குடல் சார்ந்த பிரச்சினைகள் அதிகரிப்பதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம்
நீண்ட கால தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம், குடல் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதோடு உடலில், மன அழுத்த ஹார்மோன் அதிகம் சுரப்பதால், மூளையின் செயல் திறனும் பெரிதும் பாதிக்கப்படும்.